துர்வாச முனிவர், நடராஜப் பெருமானின் தாண்டவத்தைக் காண வேண்டி இத்தலம் வந்து தேவலோக பாரிஜாத மலர் கொண்டு வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் தாண்டவக் கோலம் காட்டியருளினார். அதனால் இத்தலம் 'களர்' என்ற பெயர் பெற்றது.
மூலவர் 'பாரிஜாதவனேஸ்வரர்', 'களர்முனைநாதேஸ்நாதர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க மூர்த்தியாக காட்சி தருகின்றார். அம்பிகை 'அமுதவல்லி அம்பாள்', 'இளங்கொம்பனையாள்' என்னும் திருநாமங்களுடன் என்றும் காட்சி தருகின்றாள். இக்கோயிலில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒருசேர கிழக்கு திசை நோக்கியே காட்சியளிக்கின்றனர்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், 60 ஆயிரம் முனிவர்களுக்கு உபதேசம் செய்தருளிய ஆறுமுகப் பெருமான் காட்சி அளிக்கின்றார். அடுத்து வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தென்மேற்குப் பகுதியில் சிவகாமி உடனுறை நடராஜப் பெருமான் சன்னதி உள்ளது. அவர் எதிரில் துர்வாச முனிவர் உள்ளார்.
துர்வாசர், பராசரர், காலவ முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|